ஏ.டி.எம் மையத்தில் திருட முயன்ற என்ஜீனியரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகர் பகுதியில் தேசிய வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளார். இதுகுறித்து வங்கியின் சார்பில் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டுள்ளனர். அப்போதும் முககவசம் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் இரும்புக் கம்பியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளார்.
ஆனால் பணத்தை எடுக்க முடியாததால் அந்த நபர் அங்கிருந்து உடனடியாக தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனைதொடர்ந்து காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்தபோது சந்தேகப்படும்படி ஒருவர் அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் ஓம்சக்திநகரை சேர்ந்த சிவசந்திரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிவசந்திரன் தான் ஏ.டி.எம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காவல்துறையினர் சிவசந்திரனை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் என்ஜீனியரான சிவசந்திரன் கொரோனா காரணத்தால் வேலை இழந்து வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து வருமானம் இல்லாத காரணத்தால் கணவன் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். மேலும் பணம் இல்லாததால் திருட திட்டமிட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து சிவசங்கரன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.