ஆஸ்திரேலியாவில் நடப்பு சீசனுக்கான ஏ லீக் கால்பந்து தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், ஆஸ்திரேலிய கால்பந்து சம்மேளனத்தின் உரிய அனுமதியை பெற்று நியூசிலாந்தை சேர்ந்த வெலிங்டன் ஃபீனிக்ஸ் அணி பங்கேற்கிறது. இந்நிலையில், இன்று ஆக்லாந்தில் நடைபெற்ற லீக் போட்டியில் மெல்போர்ன் சிட்டி எஃப்.சி – வெலிங்டன் ஃபீனிக்ஸ் அணிகள் மோதின.
முதல் பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய மெல்போர்ன் சிட்டி எஃப்.சி அணிக்கு கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அவை அந்த அணியின் மோசமான ஃபினிஷிங்கால் வீணாகின. இதையடுத்து, இரண்டாம் பாதியில் வெலிங்டன் ஃபீனிக்ஸ் அணி அட்டாக்கிங் முறையில் விளையாடியது.
இந்த நிலையில், ஆட்டத்தின் 58ஆவது நிமிடத்தில் வெலிங்டன் வீரர் டேவிட் பால் கோல் அடித்தார். இதன்பின் மெல்போர்ன் சிட்டி அணியால் வெலிங்டன் ஃபீனிக்ஸ் அணியின் டிஃபெண்டர்களைக் கடந்து கோல் அடிக்க முடியாமல் போனது. இறுதியில், வெலிங்டன் ஃபீனிக்ஸ் அணி இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் மெல்போர்ன் சிட்டி எஃப்.சி அணியை வீழ்த்தியது.
இதன் மூலம், வெலிங்டன் ஃபீனிக்ஸ் அணி 17 போட்டிகளில் விளையாடி எட்டு வெற்றி, மூன்று டிரா, ஆறு தோல்வி என 27 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மறுமுனையில், மெல்போர்ன் சிட்டி எஃப்.சி அணி 18 போட்டிகளில் விளையாடி ஒன்பது வெற்றி, மூன்று டிரா, ஆறு தோல்வி என 30 புள்ளிகளுடன் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.