தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஹைடெக் விபச்சாரம் தொடர்பாக 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தெலுங்கானாவின் பேகம் பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது சல்மான்கான் என்கிற சமீர் என்பவர் வசித்து வருகிறார். முதலில் இவர் ஒரு ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வந்த போது விபச்சார கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஹோட்டலில் தங்குவதை கவனித்துள்ளார். இந்நிலையில் சுலபமாக சம்பாதிக்க இதுதான் சிறந்த வழி என முடிவு செய்து போதைப் பொருள் விற்பனை செய்யும் ஆர்னோ என்பவருடன் தொடர்பு வைத்துள்ளார்.
அதன் பின் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கடந்த 2016 -ஆம் வருடம் சோமாஜி கூடா பகுதியை மையமாகக் கொண்டு விபச்சார விடுதி நடத்த தொடங்கியுள்ளனர். அதாவது வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக மொத்தம் 17 பேர் முக்கிய அமைப்பாளர்களாக வேறு வேறு மாநிலங்களில் இதை நடத்தி வந்துள்ளனர். இதில் ஒவ்வொரு வாட்ஸ் அப் குழுவிலும் தலா 300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் மூலமாக 14,190 இளம்பெண்களுடன் விபச்சார விடுதிகளை நடத்தி வந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள இவர்களது ஹைடெக் விபச்சார தொழில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது வேலை வாங்கி தருவதாக கூறி அப்பாவி பெண்களை புகைப்படம் எடுத்து அவற்றை வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் அவற்றைப் பார்க்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பெண்களை தேர்வு செய்து கால் சென்டர்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். இதனையடுத்து அவர்களிடமிருந்து கால் சென்டர் ஊழியர்கள் ஒரு தொகையை ஆன்லைன் மூலமாக பெற்றுக் கொள்வார்கள். அந்த பணத்தில் 30 சதவீதம் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கும், 35 சதவீதம் கால் சென்டர் பிரதிநிதிகளுக்கும், மீதமுள்ள 35 சதவீத பணத்தை நிர்வாகிகள் பங்கிட்டு எடுத்துக் கொள்கின்றனர். மேலும் விபச்சாரத்திற்கு பெண்கள் கேட்கும் ஆண்களுடன் பேசுவதற்காக பல்வேறு இடங்களில் கால் சென்டர்களை ஏற்பாடு செய்திருக்கின்றனர். வெளிநாட்டு பெண்களுக்கு போலி பாஸ்போர்ட்டுகள், ஆதார் கார்டுகளை தயார் செய்து இவர்களை இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கு அழைத்து செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.