Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடர் : விவோ வெளியே, பதஞ்சலி உள்ளே!

ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கு பதஞ்சலி நிறுவனம் விண்ணப்பிக்க உள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சராக கடந்த சில ஆண்டுகளாக சீனாவைச் சேர்ந்த பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ இருந்து வந்தது.

ஆனால், காஷ்மீரின் கல்வான் பள்ளதாக்கில் இந்தியா – சீனா படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்தியாவில் சீன எதிர்ப்பு மனநிலை அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகவுள்ளதாக விவோ அறிவித்தது.

மேலும், ஜியோ, அமேசான், டாடா குழுமம், அதானி குழுமம், பைஜூஸ், ட்ரீம் 11 உள்ளிட்ட பல நிறுவனவனங்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சருக்கு விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளன. இந்நிலையில், இந்த பல்முனைப் போட்டியில் யோகா குரு பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது.

இது குறித்து பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.திஜராவலா கூறுகையில், “பதஞ்சலி நிறுவனத்தை சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.

இது குறித்து brand strategist ஹரிஷ் பிஜூர் கூறுகையில், “ஒரு பன்னாட்டு நிறுவனத்தின்மேல் உள்ள மோகம் பதஞ்சலிக்கு நிறுவனத்திற்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், பதஞ்சலி நிறுவனத்தை ஒரு சிறந்த தேசியவாத நிறுவனமாக நம்மால் கருத முடியும். எனவே, பதஞ்சலி நிறுவனம் ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருந்த சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆண்டுக்கு 440 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கல்வான் மோதலைத் தொடர்ந்து, டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகவுள்ளதாக விவோ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |