ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கராத்தே தியாகராஜன் பேசுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக சார்பில் இந்திய அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நேற்று சென்னை அடையாறில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கராத்தே தியாகராஜன், கரூர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கராத்தே தியாகராஜன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அதிமுக காங்கிரஸ் அதன்பின் பாஜகவில் இணைந்துள்ள கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியில் இருந்த போதே திமுகவை பற்றியும் மு க ஸ்டாலின் பற்றியும் விமர்சித்து பேசுவார்.
தற்போது பாஜகவில் இருப்பதால் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். மேலும் திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரை முதல்வராக்குவதற்கு சிலர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசை மத்திய அரசு கவனித்து வருகின்றது. மாநில அரசு இஷ்டத்திற்கு எல்லாம் ஆட்சி செய்ய முடியாது. தமிழ்நாட்டில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிகமாக ஆட வேண்டாம். உங்களுடைய அனைத்து தகவல்களும் அண்ணாமலை இடம் உள்ளது. உங்களுக்கு ப்ரமோஷன் கிடைக்காது. பென்ஷன் கிடைக்காது என்று எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார். பாஜக மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கிறது என்பதற்காக அக்கட்சியைச் சேர்ந்தவர் ஐபிஎஸ் அதிகாரிகளை மிரட்டும் தோரணையில் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.