கோவிலில் ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்த 2 வாலிபர்களை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் அரண்மனை புதூர் அருகே உள்ள முல்லை நகரில் தட்சிணாமூர்த்தி கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி கோவிலில் இருந்த 9 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் சிலைகளை கொள்ளையடித்து பெருங்குளத்தை சேர்ந்த ஸ்ரீதர், மற்றும் கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடந்த 27ம் தேதி ஸ்ரீதரை காவல்துறையினர் கைது செய்து கடத்தப்பட்ட ஐம்பொன் சிலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தலைமறைவான கார்த்திக்கை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் நேற்று தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தானாகவே முன்வந்து சரணடைந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் கார்த்திக்கை வருகின்ற 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்து பெரியகுளம் கிளை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீதர் மற்றும் கார்த்திக் இருவரையும் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.