சபரிமலை கோயிலில் நாளை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாதத்திற்கான பூஜைக்கு நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். அங்கு வரும் 21ஆம் தேதி வரை கோவிலில் பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்ச பூஜை பின் மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.
6 மணிக்கு தீபாராதனை அபிஷேகம் நடைபெறும் எட்டு முப்பது மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். இதில் தினசரி நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உள்ளிட்ட பூஜைகளும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கு மருத்துவச் சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும். 17ஆம் தேதி முதல் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மாத பூஜையை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்படுவதால் கோவிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு சிறப்பு பஸ் வசதியை ஏற்பாடு செய்துள்ளது.