தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த மாதம் லேசான காய்ச்சல் ஏற்பட்டது.அதனால் மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியதால் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும் அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் செய்தி வெளியிடப்பட்டது. அதன் பிறகு இரண்டு ஒரு நாட்களில் மீண்டும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் அரசு பணிகளையும் கழக செயல்பாடுகளையும் வழக்கம் போல தொடர ஆயத்தமாக இருக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தனது ஓய்விலும் அத்தியாவசிய பணிகளை மேற்கொண்டு வருவதாக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். தற்போது அவரின் உடல்நிலை சீராகியுள்ள நிலையில் வழக்கமான அரசு பணிகளுக்கு திரும்பி விட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு சென்று அரசு திட்டங்களை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிலையில் தனது பயணம் தொடர்பாக தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில், நான் சந்தித்த பொதுமக்கள் பலரும், உடம்பு சரி இல்லைன்னு சொன்னிங்களே நல்லா ஆயிட்டீங்களா? உடம்பை நன்றாக பார்த்துக்கோங்க.கொஞ்சம் ஓய்வெடுத்து வேலை பாருங்கள் என்று அக்கறையுடன் கூறினர். எனக்கு பல உடல் நலம் காக்கும் ஆலோசனைகளையும் அவர்கள் வழங்கினார்கள் என்று கூறியுள்ளார். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு வேலூர் மாவட்டத்திற்கு வந்தபோது நத்தம் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி பிரதேஷ் என்ற பெண்மணி எனக்கு மிகச் சின்ன அளவிலான ஒரு சீட்டை கொடுத்தார். அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று நான் ஆவலுடன் பிரித்துப் பார்த்தேன். அதில், சாமை உணவு எடுத்துக் கொள்ளுங்கள் ஐயா, காய்ச்சல் வராது என்று அதில் எழுதி இருந்தார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.