பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பஞ்சாப் சட்டமன்ற பேரவையில் 117 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் 92 பேரும், காங்கிரஸ் கட்சிக்கு 18 எம்எல்ஏக்களும், சிரோமணி அகாலி தளத்துக்கு 3 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 எம்எல்ஏவும், ஒரு சுயேட்சை எம்எல்ஏவும் இருக்கின்றனர். பஞ்சாப் மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக முதல்வர் பகவந்த்மான் ஜெர்மனிக்கு சென்றிருந்தார்.
இவர் கடந்த திங்கட்கிழமை நாடு திரும்பிய நிலையில், ஜெர்மனியில் இருந்து டெல்லிக்கு வரும் விமானத்தில் முதல்வர் பகவந்த்மான் அதிக குடிபோதையில் இருந்ததால் பாதியிலேயே இறக்கிவிடப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் முதல்வர் அதிக குடிபோதையில் இருந்ததால் விமானத்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்டார். இதனால் விமானம் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதை முதல்வருடன் விமானத்தில் இருந்த சக பயணிகள் கூறியதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
அதன் பிறகு முதல்வர் அதிக குடிபோதையில் இருந்ததால் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய மாநாட்டிலும் கலந்து கொள்ளவில்லை. இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபிய மக்களுக்கு அவமானத்தையும், சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு இதுவரை ஆம் ஆத்மி கட்சியினர் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. இந்த சம்பவத்திற்கு கண்டிப்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால் இந்த தகவல்களுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மல்விந்தர் சிங் கூறியதாவது, முதல்வர் பகவந்த்மான அரசு முறை பயணமாக 8 நாட்களுக்கு ஜெர்மனி சென்றிருந்தார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஜெர்மனிக்கு சென்றதை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால்தான் முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.
முதல்வர் பகவத்மான் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். ஆனால் அவர்கள் அரசியல் பேசவில்லை என்று கூறியுள்ளார். மேலும் பஞ்சாபில் ஆட்சியை கவிழ்ப்பதற்காக பாஜக திட்டம் தீட்டியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், செப்டம்பர் 22-ஆம் தேதி சட்டமன்ற பேரவை கூட்டம் கூட்டப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதோடு எம்எல்ஏக்களுக்கு 25 கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளதாகவும் பாஜக மீது ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.