மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் 2-வது நாளாக அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இதனையடுத்து புனித் ராஜ்குமார் உடல் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் மேற்கொள்ளப்பட்டனர். பின்னர், பொதுமக்கள் அஞ்சலிக்காக அரசுக்கு சொந்தமான கண்டியூர்வா மைதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து புனித் ராஜ்குமார் உடலுக்கு பிரபலங்கள், திரையுலகினர், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் சேர்ந்து பணிபுரிந்தோம் என்று நடிகர் பிரபுதேவா தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் மகள் வெளிநாட்டில் இருந்து வர தாமதமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து புனித் ராஜ்குமாரின் உடல் இன்று அடக்கம் செய்யப்படும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். முழு அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமாரின் உடல் அடக்கம் நடைபெற உள்ளது.