பீகார் மாநிலத்தில் எம்எல்ஏ ஒருவரின் காரில் டீசலுக்கு பதிலாக தண்ணீரை ஊற்றி ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பீகார் மாநிலத்தின் சிக்தா சட்டமன்ற தொகுதியின எம்எல்ஏ வாக இருப்பவர் விரேந்திர குப்தா. இவர் சமீபத்தில் மேற்கு சாம்பாரா என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தனது காருக்கு டீசல் போட்டுள்ளார். அங்கு தனது காருக்கு 51 லிட்டர் டீசலை நிரப்பியுள்ளார். பின்னர் அங்கிருந்து காரை எடுத்து 500 மீட்டர் தான் சென்றிருப்பார், உடனே கார் நின்று விட்டது. பிறகு டிரைவர் இறங்கி காரை பரிசோதித்து உள்ளார். ஆனால் கார் ஏன் நின்றது என்பது குறித்து அவருக்கு தெரியவில்லை. உடனடியாக மெக்கானிக் ஒருவரை அழைத்து வாகனத்தை சோதனை செய்தபோது இன்ஜினில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிறகு பெட்ரோல் டேங்கை திறந்து பார்த்தபோது டீசலுக்கு பதில் முழுவதும் தண்ணீர் நிரம்பியிருந்தது தெரியவந்தது. அப்போதுதான் டீசல் பம்பில் 51 ஒரு லிட்டர் டீசல் எனக்கூறி பச்சைத் தண்ணீரை நிரப்பிய சம்பவம் அம்பலமானது. இதையடுத்து அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெட்ரோல் பம்ப் உரிமையாளர், மேலாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.