ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தன் விண்வெளி பணிகளைத் துவங்க புது கூட்டணிகளை தேட ஆரம்பித்து இருக்கிறது. உக்ரைன் போர் குறித்த உறவுகளில் ஏற்பட்ட முறிவை அடுத்து ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ் கோஸ்மோஸ் அதன் ஐரோப்பிய விண்வெளி உறவுகளை முடித்துக் கொண்டது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார நடவடிக்கைகளை விதித்துள்ளது. இதனால் ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக ரஷ்யாவுடனான செவ்வாய்கிரக கூட்டுத் திட்டம் உட்பட பல்வேறு பணிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் விண்கலமான சோயுஸ் விண்கலத்தை சார்ந்து இருக்க முடியாத சூழலில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இந்தியாவின் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறது. அத்துடன் இந்தியாவையும் சேர்த்து அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஜப்பானுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஐரோப்பிய விண்வெளி நிறுவன பொது இயக்குனர் ஜோசப் அஷ்பேச்சர் கூறினார். இந்தியாவின் பிஎஸ்எல்வி மற்றும் எஸ்எஸ்எல்வி செயற்கைக்கோள் ஏவுகலன்கள் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.