அட்சய திருதியை பண்டிகை வருகின்ற மே 3-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த அட்சய திருதியை பண்டிகையை இந்து மற்றும் ஜெயின் சமூக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த நன்னாளில் எந்த ஒரு பொருள் வாங்கினாலும் அது பன்மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. எனவேதான் அட்சய திருதியை நாளில் நகை கடைகளில் திரளும் பொதுமக்கள் தங்க நாணயம் அல்லது தங்க நகைகளை வாங்கி செல்கின்றனர். மேலும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வளமும், செல்வமும், அதிர்ஷ்டமும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. இவ்வாறு அட்சய திருதியை அன்று தங்க நாணயம் வாங்க செல்பவர்கள் பொதுவாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தங்க நாணயங்கள் – தங்க நாணயங்களை பெரும்பாலும் வங்கிகள் மூலம் வாங்கலாம். அதோடு மட்டுமில்லாமல் MMTC மற்றும் சில நிதி நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்தும் தங்க நாணயங்கள் வாங்கலாம்.
மொபைல் ஆப்ஸ் – தங்க நாணயங்களை ஜிபே, போன்பே உள்ளிட்ட மொபைல் ஆப்கள் மூலமும் வாங்க முடியும்.
கேரட் – நீங்கள் வாங்கும் தங்க நாணயத்தின் தூய்மையை அதனுடைய கேரட் அடிப்படையில் கண்டுபிடிக்க முடியும். சுத்தமான தங்க நாணயம் 24 கேரட் . சில்வர் அல்லது துத்தநாகம் லேசாக கலக்கப்பட்ட தங்கம் 22 கேரட் இருக்கும்.
பிஐஎஸ் ஹால்மார்க் – தங்கத்தின் அல்லது தங்க நாணயத்தின் தூய்மையை குறிக்கும் சான்று பிஐஎஸ் ஹால்மார்க். அதாவது நீங்கள் தங்க நாணயம் வாங்கும்போது அதில் பிஐஎஸ் ஹால்மார்க் இருந்தால் சுத்தமான தங்கம். ஏற்கனவே அரசு எல்லா நகைகளுக்கும் 2021 ஜூன் மாதம் முதல் பிஐஎஸ் ஹால்மார்க் கட்டாயம் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பேக்கேஜிங் – தரமான பேக்கேஜிங்கில் தங்க நாணயங்கள் வாங்குவது அவசியம். இதன் மூலம் மோசடி, சேதாரம், கலப்படம் ஆகியவற்றை தடுக்க முடியும்.
தங்க நாணயங்களை விற்பது – தங்க நாணயங்களை நீங்கள் வங்கிகளிடமிருந்து வாங்க முடியும். ஆனால் அதனை வங்கிகளிடம் விற்க முடியாது. நகைக்கடைகளில் தங்க நாணயங்களை விற்கலாம்.
செய்கூலி – 8% முதல் 16% வரை தங்க நாணயங்களுக்கு செய்கூலி வசூலிக்கப்படுகிறது. செய்கூலி விகிதம் நாணயத்தின் வேலைப்பாடுகளுக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படும்.