வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிப்பது போன்று இடம் பெற்றிருந்த காட்சிகளினால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த காட்சிகள் அமைத்தது தொடர்பான வழக்கில் பட தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இது சட்ட விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும்போது திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறாத காரணத்தினால் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள அமைப்பின் சார்பில் 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பெயரில் விசாரணை நடந்து வந்த நிலையில் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் ஐஸ்வர்யா தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்கும்படி பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளார்.