சென்னையை தலைமையிடமாக கொண்டு ஐ.எப்.எஸ். என்ற தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கிளைகள் இயங்கி வந்தது. பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு 10 % முதல் 25 % வரை ஒவ்வொரு மாதமும் வட்டி தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்யப்பட்டது. நட்சத்திர ஓட்டல்களில் வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடத்தி லட்சக்க ணக்கில் முதலீடுகளும் பெறப்பட்டது. அந்த அடிப்படையில் 1 லட்சம் பேரிடம் ரூபாய்.6 ஆயிரம் கோடி வரை வசூலிக்கப்பட்டது. எனினும் குறிப்பிட்டவாறு ஒவ்வொரு மாதமும் வட்டி தொகையை முறையாக வழங்கவில்லை. இதன் காரணமாக இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோசடி குறித்து வேலுார், ராணிப்பேட்டை, ஈரோடு உள்ளிட்ட 21 இடங்களில் சோதனை மேற்கொண்டு ரூபாய்.1 கோடியே 5 லட்சம் ரொக்கம், 247 ஆவணங்கள், 40 பவுன் தங்கம் மற்றும் 15 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பணமோசடி குறித்து அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் ஊழியர்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஐ.எப்.எஸ். நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த குப்புராஜ் (40), ராணிப்பேட்டையை சேர்ந்த ஜெகநாதன் (34) போன்றோரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இருவரும் பொதுமக்களிடம் கோடிக் கணக்கான பணத்தை வசூலித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கூறியிருப்பதாவது “மோசடி நிதிநிறுவனத்தில் ஜெகநாதன் மண்டல மேலாளராகவும், குப்புராஜ் பணம் வசூல் செய்பவராகவும் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்று தெரிவித்தனர்.