Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு ….!!

கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் எடுத்த நடவடிக்கையில் இந்த கிரானைட் முறைகேடு கடந்த 2018ஆம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. மேலும் அருகே சேக்கியேதால் கண்மாய் மற்றும் அரசு இடத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக 36 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்டவிரோத கிரானைட் குவாரிகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. அதன்படி மதுரையில் சட்டவிரோத கிரானைட் குவாரி தொடர்பாக விசாரணை நடத்திய சகாயம் 1,11,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து விசாரணை ஆணையர் பொறுப்பிலிருந்து சகாயம் விடுவிக்கப்பட்டார். அதேவேளையில் சகாயத்திற்கு பாதுகாப்பு வழங்கும்படி கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம் மற்றும் ஜெயச்சந்திரன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரி சகாயத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது சுட்டிக்காட்டிய நீதிபதிகள் கடந்த 2018-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் விசாரணையில் பங்கேற்ற தற்போதைய அதிகாரிகளுக்கும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கும் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். நீதிமன்ற விசாரணைக்கு அதிகாரிகளின் உதவி தேவைப்படும் என்பதால் அவர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Categories

Tech |