கொரோனாவிற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கோரும் ஐநா பொதுச் சபை புதிய தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்க்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஐநா பொதுச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் 193 உறுப்பினர்களை கொண்ட ஐநா பொதுச் சபை ஒரு புதிய தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பின்னர் ஐநா சபை தற்போது வரை மூன்று தீர்மானங்களை கொண்டுள்ளது. அதில் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 169 நாடுகள் ஆதரவு தெரிவித்து தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தன.
இந்த ஓட்டெடுப்புக்கு பின்னர் ஐநா சபை இந்திய துணைத்தூதர் கே.நாகராஜ் நாயுடு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” உலக மக்கள் அனைவருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கின்ற கொரோனா நோய்க்கு எதிராக உலக நாடுகள் முழுவதும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கும், ஒற்றுமையை நிலை நாட்டவும் மற்றும் பல தரப்பு ஒத்துழைப்புகளை வழங்கவும் ஐநா பொதுச்சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா தனது வாக்கை பதிவு செய்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார். ஐநா பொதுச்சபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் ” அனைத்து மட்டங்களிலும் சர்வதேச ஒத்துழைப்பு, பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமை ஆகிய அனைத்திற்கும் உரிய உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அதுமட்டுமன்றி கொரோனா வைரஸ் தொற்று மற்றும் விளைவுகள் போன்ற உலக அளவிலான நெருக்கடிகளுக்கு உலகம் உறுதியான பதில் அளிப்பது ஒன்றுதான் வழி. உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய தலைமைத்துவ பங்களிப்பு ஒப்புக் கொள்ளப்படுகிறது” என்று அந்த தீர்மானம் கூறுகின்றது. மேலும் அந்த தீர்மானம் உறுப்பு நாடுகளை, அனைத்து நாடுகளுக்கும் தரம் வாய்ந்த, பாதுகாப்பான, திறமையான, மலிவு கட்டண பரிசோதனை, சிகிச்சை, மருந்து, தடுப்பூசி மற்றும் கொரோனா வைரஸ்க்கு எதிரான அத்தியாவசிய சுகாதார தொழில்நுட்பங்கள் ஆகியவற்றிற்கு உகுந்த நேரத்தில் அணுகலை ஏற்படுத்துவதற்கு வலியுறுத்துகிறது.
மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சிகளுக்கு பெரும் ஆதரவு அளிக்கின்றது. கொரோனாவை முடிவுக்கு கொண்டு வரவும், பரவலாக தடுக்கவும், கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பான, தரமான, செயல்திறன்மிக்க, அணுகக்கூடிய, மலிவான தடுப்பூசியின் பாங்கை அங்கீகரித்துள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் வாக்களித்துள்ளன. மேலும் உக்ரைன் மற்றும் ஹங்கேரி ஆகிய இரு நாடுகளும் தீர்மானத்தை புறக்கணித்து விட்டன. மற்ற நாடுகள் அனைத்தும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக தங்கள் ஓட்டுகளை பதிவு செய்துள்ளன.