ஈரானுக்கு எதிராக உள்ள அமெரிக்க பொருளாதார தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்திருக்கிறது.
உலக நாடுகளில் அதிக அளவு அணு ஆயுதங்களை பயன்படுத்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருந்த ஈரானுக்கு, ஐ.நா மூலமாக கடந்த 2010 ஆம் ஆண்டு அணு ஆயுத தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு ஈரான் வெளிநாடுகளில் இருந்து போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை வாங்குவதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகள், ஈரானுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு அணு ஆயுதங்கள் தொடர்பாக அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஈரான் தங்களின் அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான திட்டங்கள் இல்லை என்பதை உறுதி செய்வதற்கும், அதற்கு பதிலாக அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளும் ஒப்புதல் அளித்து ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளனர். மேலும் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள நிபந்தனைகளை மீறினால் ஈரான் மீது ஐநா தடையை மீண்டும் அமல்படுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள எந்த நாட்டுக்கும் உரிமை உண்டு என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இத்தகைய அம்சங்களைக் கொண்ட ஒப்பந்தம் ‘மீள் தடை’ என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதம் முடிவடையும் ஈரான் மீதான ஐநா ஆயுத தடையை காலவரை இல்லாமல் மேலும் நீட்டிக்க வேண்டுமென ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. ஆனால் அமெரிக்காவின் அந்த தீர்மானம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈரான் விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மிக மோசமான முறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
அதனால் மிகவும் கோபமடைந்த அமெரிக்கா, அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மீள் தடை அம்சத்தின் மூலமாக ஈரான் மீதான அனைத்து பொருளாதாரத் தடைகளையும் மீண்டும் அமல்படுத்துவதற்கு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்தக் கோரிக்கையை ஐநா சபையில் முறைப்படி ஒப்படைக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ ஆகியோர் நியூயார்க் சென்றிருக்கின்றனர். ஆனால் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து முழுவதுமாக விலகி விட்டதால், தற்போது அமெரிக்காவால் ஈரான் மீது எந்த ஒரு தடையும் விதிக்க முடியாது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகள் கூறி வருகின்றன.
இருந்தாலும் சட்ட ரீதியான முறையில் தாங்கள் அந்த ஒப்பந்தத்தை நீடிப்பதாக அமெரிக்கா வாதாடி வருகிறது. ஒப்பந்தத்திலிருந்து விலகினாலும் மீள் தடை அம்சத்தை பயன்படுத்துவதில் அமெரிக்காவை எவராலும் தடுக்க முடியாது என ட்ரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்தால், அந்தத் தடை அமலில் இருந்து கொண்டிருப்பதாக அமெரிக்காவும், அப்படி எந்த ஒரு தடையும் இல்லை என்று பிற நாடுகளும் ஒரே சமயத்தில் கூறும் ஒரு வினோதமான சூழ்நிலை கட்டாயம் உருவாகும். அப்படி ஒரு சூழ்நிலை உருவாகினால், உலக அளவில் ஏற்கனவே குறைந்து கொண்டிருக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் முக்கியத்துவம் மேலும் மந்தம் அடைவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக்கள் எழுந்துள்ளன.