இந்தியா- இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா நாடுகள் ஒன்றிணைந்து ஐ2யு2 என்ற மாநாட்டின் முதல்பதிப்பு இன்று காணொலி மூலம் நடைபெற இருக்கிறது. அதாவது இஸ்ரேல் பிரதமர் யாகிர் லாபிட், ஐக்கியஅரபு அமீரக அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் போன்ற தலைவர்கள் கலந்துகொள்ளும் காணொலி வாயிலான மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி இன்று பங்கேற்கிறார். ஐ2யு2 கூட்டமைப்பின் முக்கியமான அம்சமாக நீர், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிய 6 முக்கிய துறைகள் கண்டறியப்பட்டு, இத்துறைகளில் தனியார் முதலீடு மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்வது தொடர்பாகவும் மாநாட்டில் ஆராயப்படுகிறது.
இம்மாநாட்டில், இந்தியாவில் 200 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான விவசாய பூங்கா திட்டம் அறிவிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்து உள்ளது. ஐக்கியஅரபு அமீரகம் வழங்கும் பகுதியளவு நிதி உதவியுடன் செயல்படவுள்ள இத்திட்டத்திற்கு இஸ்ரேல் வழங்கும் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் அமெரிக்க தனியார் துறையின் ஆதரவுடன் இந்த திட்டம் துவங்கப்படும் என வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். இத்திட்டம் ஒரு தனித்துவம் வாய்ந்த கூட்டு முயற்சியாகும். இது உலகம் இன்று எதிர்கொள்ளும் முக்கியமான சவால்களில் ஒன்றாகும் என்று நாங்கள் நினைக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்