ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வந்தது. இதனால் கபினை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு உபரி நீர் அதிகரித்து வந்தது. அதில் அதிகபட்சமாக 2.46 லட்சம் கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகள் அனைத்தும் மூழ்கி சேதமடைந்தது. இதனையடுத்து தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவிகள் குளிப்பதற்கும், பொதுமக்கள் காவேரி ஆற்றினை கடந்து செல்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
தற்போது பருவமழையின் அளவு குறைந்துள்ளதால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு முற்றிலுமாக குறைக்கப்பட்டு வந்தது. இதனால் வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த பிரதான அருவி, பெண்கள் குளிக்கும் அருவி, நடைபாதை தடுப்பு கம்பிகள் சீரமைப்பு பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று தற்போது முற்றிலுமாக முடிவடைந்துள்ளது. மேலும் காவேரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருவதாலும் அருவிகள் சீரமைப்பு முடிவுற்றதாலும் 86 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தற்போது அனுமதி அளித்துள்ளார்.
தற்போது ஆயுத பூஜை, மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் ஏராளமான பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் உற்சாக பரிசில் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.