கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் சென்ற ஒரு மாதத்திற்கு மேலாக தென் மேற்கு பருவமழை பெய்ததால் கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டது. காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழைபெய்வது நின்றதாலும், அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய துவங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப் படியாக குறைய தொடங்கியது.
அந்த வகையில் நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக குறைந்தது. காவிரியாற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்த போதிலும் ஒகேனக்கல் மெயின்அருவி, ஐந்து அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
அத்துடன் காவிரியாற்றில் கரைகளை தொட்டவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேட்டூர் அணை முழுகொள்ளளவை எட்டியதால் அதன் தாக்கம் ஒகேனக்கல் மெயின் அருவி வரை இருக்கிறது. இதனால் அருவியே தெரியாதவாறு தண்ணீர் கொட்டுகிறது. காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அசம்பாவித சம்பவங்களை ஏற்படாமல் இருக்க காவல்துறையினர், தீயணைப்புபடையினர் ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் வருவாய்த் துறையினரும் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை கண்காணித்து வருகின்றனர்.