கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. அத்துடன் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரிமாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நீர்வரத்தினை கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்றுகாலை 8 மணி நிலவரப்படி 4வது நாளாக நீர்வரத்து அதே அளவில் நீடிக்கிறது. அதனால் ஒகேனக்கல்லில் நேற்று 9வது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக மெயின்அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகள் தெரியாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதுமட்டுமின்றி பாறைகளே தெரியாத அளவுக்கு ஐந்து அருவிகளை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவியில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் 9வது நாளாக தடை விதித்தது. அதனை தொடர்ந்து காவல்துறையினர், தீயணைப்புபடையினர், வருவாய்த்துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளில் தீவிரரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லை கடந்து மாறுகொட்டாய் வழியே காவிரிஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.