கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்ததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் அதிகளவில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனையடுத்து தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, பிலிகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழைகாரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 98 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து குறைந்தது. ஆனாலும் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகள், நடைபாதை, மாமரத்து கடவு பரிசல் துறை போன்ற பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் குளிக்க வேண்டாம் என்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.