கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 13,243 கனஅடிநீரும், கபினி அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடிநீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் 16 ஆயிரத்து 243 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதோடு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 28 ஆயிரம் கனஅடிநீர் வந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் குறைந்து வந்தது.
இதனால் மெயின் அருவி, ஐவர்பாணி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் ஒகேனக்கல்லில் இன்று குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து மகிழ்ந்தனர். இதனையடுத்து தொங்கு பாலத்தில் நின்றவாறு பாறைகளுக்கு இடையே தண்ணீர் விழும் காட்சியை கண்டு ரசித்தனர். ஆனால் மெயின் அருவி குளிக்கும் இடம் சேதமானதால் அங்கு தடை விதிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.