திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதி முழுமையாக விவசாயத்தை நம்பியுள்ள பூமி. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பரப்பலாறு அணை விவசாயத்திற்கு மட்டுமின்றி முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. பெருமாள் குளம், சடையன்குளம், ஜவ்வாதுபட்டி, பெரியகுளம் என 10க்கும் மேற்பட்ட குளங்களுக்கான நீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. தென் தமிழகத்தின் புகழ்பெற்ற சந்தையாக ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை உள்ளது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் திமுக 8 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 4 முறை வென்றுள்ளது. 1996 ல் தொடங்கி அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று திமுகவின் சக்கரபாணி தற்போது வரை தொடர்ந்து எம்எல்ஏவாக நீடிக்கிறார். ஒட்டன்சத்திரத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,40,237 ஆகும். ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் அரசு கலைக்கல்லூரி மற்றும் தொழிற்கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகிலேயே காய்கறி சந்தை இருப்பதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க நகருக்கு வெளியே தொடங்கப்பட்ட உலவர் சந்தை பயன்படுத்தப்படாமல் பாழாகி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியாக இருந்தாலும் ஒட்டன்சத்திரம் தொகுதியின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை போக்க திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டம் முழுமையாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
பரப்பலாறு அணையை தூர்வாருவதன் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்பதும் மக்களின் கருத்தாகும். மதுரையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்ல வேண்டும் என்பதும் மக்களின் விருப்பம். தொப்பம்பட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் நல்லதங்காள் அணை திட்ட பணிகள் 90 விழுக்காடு முடிந்த நிலையில் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.