தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அது மட்டுமல்லாமல் மக்களின் முக்கிய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரியை குறைக்கக்கோரி டிசம்பர் 3ஆம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், கேஸ் சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி லிட்டருக்கு 100 ரூபாய் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தும் நவம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். மேலும் எந்தெந்த அணியின் சார்பில் எந்த வகை போராட்டங்கள் நடத்தப்படும் என்று போராட்டத்தின் பொறுப்பாளர்கள் அடங்கிய பட்டியலில் விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் பெட்ரோல், டீசலுக்கான வரியை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்று பேசிய அண்ணாமலை,திமுக அரசு வாக்குறுதி தந்து விட்டு நிறைவேற்றாமல் இருப்பது மக்கள் மீது அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. பொய் வாக்குறுதி அளித்து தான் ஆட்சியைப் பிடித்தோம் என திமுக ஒத்துக் கொண்டால் போராட்டத்தை கைவிடுவோம் என்று அவர் பேசியுள்ளார்.