மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தி வரும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை ஜலசக்தி மிஷன் என்று அடிப்படை விவரம் கூட தெரியாமல் அறிக்கை விடுத்துள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கைகள், அரசியல் உள்நோக்கத்தில் தினம் ஒரு அறிக்கை என்றால் அது மு க ஸ்டாலின் தான் என்று உலகமே நகைக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா காலத்திலும் ஸ்டாலின் அறிக்கை அரசியல் செய்து வருகிறார் என விமர்சித்துள்ளார். குடிநீரை ஒவ்வொரு குடிமக்களுக்கும் குறைவில்லாமல் தருவதற்கு மத்திய அரசு அமல்படுத்தி வருகிற ஜல் ஜீவன் மிஷன் என்ற திட்டத்தை ஜல்சக்தி மிஷன் என்ற அடிப்படை விவரம் கூட தெரியாமல் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.
ஒரு திட்டத்தின் பெயரையே தெளிவாக சொல்ல தெரியாத ஸ்டாலின் அதில் குற்றத்தை கண்டு பிடித்ததாக கூறி அறிக்கை வெளியிட்டு தனது நிர்வாக அறியாமையை தமக்குத்தாமே திரையிட்டுக் காட்டி இருப்பதாக கூறியுள்ளார். 10 லட்சம் ரூபாய்க்கு மேலான நிதிச் செலவில் உருவாகும் திட்டங்கள் அனைத்தும் மின்னணு ஒப்பந்தப்புள்ளி முறையின் மூலமே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட வேண்டும் என்ற அடிப்படை விஷயத்தை கூட ஸ்டாலின் அறியவில்லை என்றும் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 20 லட்சம் ரூபாய்க்கு மேலான தொகையில் நடத்தப்படும் குடிநீர் திட்டங்களை ஏன் ஊராட்சி அமைப்புகளுக்கு தரவில்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவி வகித்த ஸ்டாலின் கேள்வி எழுப்புள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். எழுபதுகளிலே வீராணம் திட்டம் எனும் பெயரிலே கோடான கோடிகளை கொள்ளை அடித்துக் கொண்டு அந்த திட்டத்திற்கு சிமெண்ட் பைப்புகளை தயாரித்துக் கொடுத்த திருக்கழுக்குன்றம் சத்தியநாராயணா சகோதரர்களையே தற்கொலை செய்துகொண்டு சாக விட்ட ஆட்சி திமுக ஆட்சி என்பதும், அதே வீராணம் திட்டத்தை புதிய வீராணம் திட்டம் ஆக்கி தலைநகர் சென்னை மக்களின் தாகத்தைத் தீர்த்தது மறைந்த முதல் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொன்மனத்து அரசாட்சி என்பதையும் இப்பூவுலகம் அறியும் என்றும் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒரு திட்டத்தை எப்படி வெற்றிகரமாக நிறைவேற்றி, அதனை மக்களுக்கு பயன்னுடைய தாக்கலாம் என நினைப்பது அதிமுகவின் அரசாட்சி என்றால்… ஒரு திட்டத்தை வைத்து எந்த வகையில் எல்லாம் கொள்ளையடிக்கலாம் என்று நரி கணக்கு போடுவது திமுக ஆட்சி என விமர்சித்துள்ளார். இதற்கெல்லாம் நீதியரசர் சர்காரியாவின் விசாரணை அறிக்கையை சாட்சி என அமைச்சர் எஸ் பி வேலுமணி சுட்டிக்காட்டியுள்ளார்