போராட்டத்தின் போது சுங்க சாவடி பணியாளர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை சுங்க சாவடி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி ஆகியவற்றில் வேலை பார்த்த தலா 28 பணியாளர்களை ஒப்பந்த தனியார் நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இதனை கண்டித்து திருமாந்துறை சுங்க சாவடி அலுவலக வளாகத்தில் பணியாளர்கள் கடந்த 1-ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நான்காவது நாளான நேற்று முன்தினம் மதியம் முதல் திடீரென பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாயவேல்(38) என்பவர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.