சென்னையில் பணியின் போது உயிரிழந்த ஒப்பந்தத் தொழிலாளர் நெல்சன் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூபாய் 15 லட்சம் வழங்கிட முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் இயந்திரத்தில் தவறி விழுந்தார்.
அவரை மீட்பதற்காக ஒப்பந்த தொழிலாளி ரவியும் இயந்திரத் துளையில் விழுந்து விட்டார். இருவரையும் உயிருடன் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நெல்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடாக 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும்” என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.