தென் ஆப்பிரிக்க நாட்டில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக டெல்லி, மஹாராஷ்டிரா, அசாம், கர்நாடகா, கேரளா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தற்போது மேற்கு வங்க மாநிலத்திலும் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து மேற்கு வங்க மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் பொது போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது. இதையடுத்து உணவகங்கள் மற்றும் பார்களில் 50 % பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும். மேலும் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். பிரிட்டன் நாட்டிலிருந்து மாநிலத்திற்கு வரும் நேரடி விமான சேவை இன்று முதல் சஸ்பெண்ட் செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி முதல் சர்வதேச விமானப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாகும்.
அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட வேண்டும். இதனைதொடர்ந்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 % பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும்.
நீச்சல் குளங்கள், ஸ்பா, அழகு நிலையங்கள், ஜிம்கள் மற்றும் ஆரோக்கிய மையங்கள் இன்று முதல் மூடப்பட்டிருக்கும். பொழுதுபோக்கு பூங்காக்கள், உயிரியல் பூங்கா, சுற்றுலா இடங்கள் அனைத்தும் மூடப்படும். வணிக மற்றும் சந்தை வளாகங்களில் 50 % பேருக்கு மட்டுமே அனுமதி. உள்ளூர் ரயில்களும் 50% பயணிகளுடன் இயக்கப்படும் மற்றும் இரவு 7 மணிக்கு மேல் இயக்கப்படாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.