நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பொது ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் 15 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்த புதிய வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காரணமாக நோய்த் தொற்று பரவக் கூடும் என்பதால் சில மாநிலங்கள் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் கிராம மக்கள் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி அதனை பின்பற்றி வருகின்றனர். அதாவது துபாயிலிருந்து தெலுங்கானா மாநில ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் உள்ள முஸ்தாபாத் மண்டலின் குடெம் பகுதியை வந்த நபருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தக் கிராமம் 10 நாட்களுக்கு சுய ஊரடங்கு விதித்துள்ளது. அந்த நபருக்கு விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று முடிவு வந்திருந்தாலும் அடுத்தடுத்த பரிசோதனையில் அந்த நபருக்கு ஒமிக்ரான் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இவரது மனைவி மற்றும் தாயார் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனரா? என்று இன்னும் கண்டறியப்படவில்லை.
இதுகுறித்து முஸ்தாபாத் மருத்துவ அதிகாரி டாக்டர் சஞ்சீவ் கூறியது, 28 வயதான நபர் துபாயில் இருந்து கடந்த டிசம்பர் 16ஆம் தேதி தெலுங்கானாவுக்கு வந்துள்ளார். அவருக்கு ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட முதல்கட்ட பரிசோதனையில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஆனால் மருத்துவத்துறையின் மேலதிக விசாரணைக்கு பிறகு டிசம்பர் 20ஆம் தேதியன்று ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த நபரின் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நேற்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு சுய ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன்படி இறைச்சி மற்றும் மளிகை கடைகளை மூட வேண்டும் என்று பஞ்சாயத்து அழைப்பு விடுத்ததாகவும், முழு கிராமத்தையும் வைரஸில் இருந்து பாதுகாப்பதற்காக சுய ஊரடங்கு விதித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி அந்த கிராமத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் கிராம மக்களுக்கு காய்கறிகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதனிடையில் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு ஆபத்தில் உள்ள நாடுகளை தவிர மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் RT-PCR பரிசோதனை செய்து பாசிட்டிவ் சோதனை செய்தாலும் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும் மரபணு சோதனைக்கு பிறகு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டால் முகவரியின் அடிப்படையில் அதிகாரிகள் அவர்களை கண்டுபிடித்து வருகின்றனர்.