இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த வைரஸ் 120 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற 10ம் தேதி வரை நீட்டித்து, புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்தில் நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதாவது மாவட்டம் முழுவதும் சமுதாயம், கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடர்கிறது. மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் மற்றும்1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பொருட்காட்சி மற்றும் புத்தக கண்காட்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. திருமண விழாக்களில் 100 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துணிக்கடைகள், கேளிக்கை விடுதிகள், ஓட்டல்கள், விடுதிகள், பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்கள், சலூன் கடைகள் ஆகியவற்றிற்கு 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
நேற்று கோவையில் உள்ள ஓட்டல்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஒரு மேஜைக்கு 2 பேர் வீதம் அமர்ந்து உணவருந்தினர். மேலும் துணிக்கடைகளில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பிறர் காத்திருப்பில் வைக்கப்பட்டனர். மேலும் கடைகளில் கை சுத்திகரிப்பு திரவங்கள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றி அரசின் அனைத்து வழிபாட்டு முறைகளையும் பின்பற்றப்பட்டது. இவற்றை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.