புதிய கொரோனா வைரஸ் ஆன ஒமைக்ரான் கடந்த 7 நாட்களுக்குள் 14 நாடுகளில் கால் தடம் பதித்து உலகை அச்சுறுத்தி வருகிற நிலையில், மத்திய சுகாதாரத்துறை விமான நிலையங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளை 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க ஆணையிட்டுள்ளது. அந்த 12 நாடுகளில் தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, நியூசிலாந்த், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், சீனா, இஸ்ரேல், ஹாங்காங், போட்ஸ்வானா, வங்கதேசம் மொரிஷியஸ் ஆகிய நாடுகளாகும். இந்த 12 நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய விமான பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்டிபிசியார் பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பரிசோதனையின் முடிவுகள் தெரியும் வரை விமான நிலைய வளாகத்திலேயே அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். மேலும் பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்தாலும்கூட, அதன்பின் 7 நாட்கள் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் 7-வது நாளில் மீண்டும் பரிசோதனை செய்து மேலும் 1 வாரத்திற்கு தனிமைப்படுத்தி நீட்டிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் நள்ளிரவு முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ஆய்வு நடத்த உள்ளோம்.
மேலும் தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசியார் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் தமிழர்கள் 7- நாள் கண்காணிக்க படுகிறார்கள். கண்காணிப்பின்றி விமான பயணிகள் யாரும் வெளியே செல்ல முடியாது என்று அமைச்சர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.