அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்ற உடனே தனியார் துறையில் வேலையில் சேர கூடாது என்றும் குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும் என்று ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மத்திய அரசு துறைகளின் செயலாளர்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின்னர் தனியார் துறையில் வேலையில் சேர்வதற்கு ஒவ்வொரு அரசுத் துறையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிர்ணயித்துள்ளது.
ஆனால் அந்த கால இடைவெளியை பின்பற்றாமல் உடனடியாக தனியார் வேலையில் சேருவது தவறான நடத்தை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் தனியார் பணியில் சேர்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஊழல் வழக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்த தடையில்லா சான்றிதழை கட்டாயமாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.