ஒய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பென்சன் தொகை அதிகரித்து மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்பு வெளிடப்பட்டது.
ஹிமாச்சல பிரதேசத்தில் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்குர் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வருகின்ற நவம்பர் மாதம் இந்த மாநிலத்தில் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக அரசு இதைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது.
நேற்று மாநில முதலமைச்சர் தலைமையில், தலைநகர் சிம்லாவில் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் மாத குடும்ப ஓய்வூதியத்தை ரூ.3500 லிருந்து ரூ.9000 வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் 1.73 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மாநிலத்தில் பயனடைவார்கள் என்றும் இந்த ஓய்வு ஊதிய உயர்வு பிப்ரவரி 1ஆம் தேதி (முன் தேதியிட்டு) வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் வரை ஓய்வு பெற்ற சுமார் 43 ஆயிரம் ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையைப் பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கருணை தொகையின் வரம்பை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் உயர்த்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற உள்ளதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை திருப்திபடுத்தும் வகையில் ஆளும் பாஜக அரசு இந்த அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.