Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஒரத்தநாடு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு தொகுதியில் நெல், தென்னை, கரும்பு ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் விவசாய பூமியாகும். தொகுதியின் பிரதான நீராதாரமாக 90 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லணை கால்வாய் உள்ளது. ஒரத்தநாடு தொகுதியில் 6 முறை திமுகவும், ஐந்து முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. ஒருமுறை காங்கிரஸ் கட்சி தொகுதியை கைப்பற்றியுள்ளது தொகுதியின் தற்போதய எம்.எல்.ஏ. திமுகவின் எம். ராமச்சந்திரன்.

ஒரத்தநாடு தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,43,014 ஆகும். ஒரத்தநாடு தொகுதியில் விவசாயமே பிரதான தொழில் என்பதால் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை அமைத்து தர வேண்டும் மக்களின் கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். முக்கிய நீர் ஆதாரமான கல்லணை கால்வாயை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் வேண்டுகோள்.

குறுங்குளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்துவதுடன் சர்க்கரை ஆலை கழிவுகளை கொண்டு மின் நிலையம் அமைக்க வேண்டும், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதும் மக்களின் விருப்பமாக உள்ளது. திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கால்நடை மருத்துவ கல்லூரியை தரம் உயர்த்த வேண்டும் என்றும், புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். எனினும் எதிர்க்கட்சி உறுப்பினராக இருப்பதால் தொடர்ந்து போராடியதன் மூலமாக சில வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்தி தர முடிந்ததாக திமுக எம்.எல்.ஏ ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பெரும்பாலான கோரிக்கைகள் அரசால் புறக்கணிக்கப்படுவதாகவும், அடிப்படை தேவைகள் கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Categories

Tech |