திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் இலங்கை வாழ் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள இலங்கை வாழ் மக்கள் கடந்த சில வருடங்களாகவே அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வந்தனர். இதனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தமிழக சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள இலங்கை வாழ் தமிழர்களின் முகாம்களை ஒருங்கிணைத்து 17 கோடியை 84 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் செலவில் 321 வீடுகள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு புதிதாக வீடுகளை அமைப்பதற்காக 3.05 ஹெக்டேர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அதற்கான நிதியும் அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளோடு சேர்த்து 1 கோடியே 62 லட்சத்து 43 ஆயிரம் செலவில் அங்கன்வாடி மையம், தார் சாலை, சிமெண்ட் சாலை, மேல்நிலை நீர் தேக்க தொட்டி, 78 தெருவிளக்குகள், புதிய மின்கம்பங்கள் மற்றும் 33 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குளியலறைகள், புதிய ஆழ்குழாய் கிணறு போன்றவைகளும் அமைக்கப்பட இருக்கிறது. இவற்றிற்கு ஒருங்கிணைந்த இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை கட்டும் பணிகளை 8 மாதத்திற்குள் முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.