பின்லாந்து நாட்டின் பிரதமர் 16 வயது சிறுமியை ஒரு நாள் பிரதமராக்கி, பிரதமர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான பின்லாந்து பிரதமராக 34 வயதுடைய சன்னா மரின் என்ற பெண் பதவி வகித்து வருகிறார். அவர் அங்கு நிலவிக் கொண்டிருக்கும் ஆண் மற்றும் பெண் பாலின இடைவெளியை முடிவுக்கு கொண்டுவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வகையில் அவர் நேற்று முன்தினம் 16 வயதுடைய சிறுமி ஆவா முர்டோ என்ற பெண்ணை ஒரு நாள் பிரதமராக்கி, பிரதமர் நாற்காலியில் அமர வைத்தார். அதன்பிறகு அந்த சிறுமி அந்த ஒரு நாளில் தொழில்நுட்பத்தில் பெண்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்த பல்வேறு அரசியல்வாதிகளை நேரில் சந்தித்து பேசினார்.
வருகின்ற 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அந்த சிறுமி ஒரு நாள் பிரதமர் பதவியை ஏற்றுள்ளார். மேலும் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பிளான் இன்டர்நேஷனல் அமைப்பின் பெண் குழந்தைகளுக்கு அங்கீகாரம் என்ற திட்டத்தின் கீழ் உலகம் முழுவதிலும் ஒரு நாள் அரசியல் மற்றும் பிற துறைகளின் தலைமைப் பதவிக்கு பெண்குழந்தைகள் வருவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அவ்வகையில் பின்லாந்து நாட்டில் நான்காவது ஆண்டாக இது பின்பற்றப்பட்டு வருகிறது. இது பற்றி பிரதமர் சன்னா மரின் கூறுகையில், தொழில்நுட்பங்கள் அனைவரும் அணுகக் கூடியதாக இருப்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மேலும் அவை நாடுகளுக்கு இடையே அல்லது சமூகங்களுக்குள் டிஜிட்டல் பிளவுகளை ஒருபோதும் ஆள படுத்தக்கூடாது என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.