தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னையில் ஒரேநாளில் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடாது மழை பெய்தது. விட்டுவிட்டு பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல கரைபுரண்டு ஓடியது. குறிப்பாக சென்னை நகரில் பிரதான சாலைகளான அண்ணா சாலை, ஜிபி ரோடு, பெரியார் சாலைகளில் சூழ்ந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் தத்தளித்தபடியே வாகனங்களை இயக்கி சென்றனர். ஒரு சில இடங்களில் வாகனங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதேபோன்று வாகன ஓட்டிகள் சாலைகளில் உள்ள பள்ளம் மேடு தெரியாமல் தடுமாறி விழும் ஆவண காட்சிகளும் அரங்கேறி வருகின்றன.
ஒரே நாளில் பெய்த மழைக்கே தாங்காத சென்னை தொடர்ந்து வரும் மழைக் காலத்தை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என மக்களிடத்தில் அச்சம் எழுந்துள்ளது. முறையாக வடிகால் நீர் பாதைகளை சீரமைகாதாது சாலையோரம் தண்ணீர் செல்லும் பாதைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளே இதற்கு காரணம் என குற்றம் சாட்டும் பொதுமக்கள் இதனை கவனிக்க வேண்டிய அதிகாரிகளும் சென்னை பெருநகர மாநகராட்சியும் கடமை தவறியதாக வேதனையில் புலம்புகின்றனர்.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற பழமொழிக்கு ஏற்ப மழையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் கிடைத்த பிறகே அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர். உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெற்றிருந்தால் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் இது தொடர்பான பணிகளை விரைந்து முடித்து இருப்பார்கள் என சுட்டிக் காட்டும் மக்கள் அரசு நிர்வாகமும் சென்னையில் இந்த நிலைக்கு காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.