Categories
மாநில செய்திகள்

ஒருவருக்கு ரூ.505 செலவில்…. பொங்கல் சிறப்பு தொகுப்பு… ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு!!

நியாய விலைக்கடைகள் மூலமாக பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பொருள் : பொங்கல் பரிசு தொகுப்பு 2022 – அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் கரும்பு வழங்குவது – தொடர்பாக.

பார்வை : 1. அரசாரணை (2டி)  எண்.41 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு                     (டி1)த்துறை, நாள்: 17.11.2021

2. அரசாணை (2டி) எண். 42 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (டி1) த்துறை நாள் 26.11.2021

பார்வை (1) – இல் காணும் அரசாணையின்படி 2022ஆம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், கீழ்க்காணும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை, ரூ.2,15,48,060/- குடும்ப அட்டைதாரர்களுக்கு பயனாளி ஒருவருக்கு ரூ505/- செலவில் மொத்தம் ரூ 1088,17,70,300/ (ரூபாய் ஆயிரத்து எண்பத்தெட்டு கோடியே பதினேழு இலட்சத்து எழுபதாயிரத்து முந்நூறு மட்டும்) செலவில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,

1 . பச்சரிசி – ஒரு கிலோ

2. வெல்லம் – ஒரு கிலோ

3. முந்திரி – 50 கிராம்

4. திராட்சை – 50 கிராம்

5. ஏலக்காய் – 10 கிராம்

6. பாசிப்பருப்பு – 500 கிராம்

7. நெய் – 100 கிராம்

8. மஞ்சள் தூள் – 100 கிராம்

9. மிளகாய் தூள் – 100 கிராம்

10. மல்லி தூள் – 100 கிராம்

11. கடுகு – 100 கிராம்

12. சீரகம் – 100 கிராம்

13. மிளகு – 50 கிராம்

14. புளி – 200 கிராம்

15. கடலை பருப்பு – 250 கிராம்

16. உளுத்தம் பருப்பு – 500 கிராம்

17. ரவை – ஒரு கிலோ

18. கோதுமை மாவு – ஒரு கிலோ

19. உப்பு – 500 கிராம்

20. துணி பை – ஒன்று

பார்வை (2) -இல் காணும் அரசாணையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஆகமொத்தம் ரூ.2,15,48,060/- குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடுதலாக கரும்பும் சேர்த்து வழங்க, கரும்பு ஒன்றுக்கு. ரூ33/ வீதம் (போக்குவரத்து செலவு உட்பட) மொத்தம் ரூ.71,10,85,980/- ( ரூபாய் எழுபத்து ஒரு கோடியே பத்து இலட்சத்து எண்பத்தைந்தாயிரத்து தொள்ளாயிரத்து எண்பது மட்டும்) செலவில் வழங்கலாம் எனவும், கரும்பினை கொள்முதல் செய்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்வதற்கு, மாவட்ட ஆட்சியர் தலைமையில், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு நுகப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ஆகியோர் உள்ளடக்கிய குழு அமைத்திட உரிய அனுமதியும், பார்வை (1) -இல் குறிப்பிடப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்பான  20 பொருட்களில், முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம் மற்றும் ஏலக்காய் 10 கிராம் ஆகியவைகளை மட்டும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மூலம் கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகள் மூலம் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யவும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, விரிவான அறிவுரைகள் தனியே வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Categories

Tech |