ரஷ்யா தாக்குதலால் இதுவரை 324 மருத்துவமனைகளை சேதபடுத்தியதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, அதன் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா தனது இறுதிக்கட்ட தாக்குதலைநடத்தி வருகிறது. இதையடுத்து துறைமுகத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாக கூறியுள்ள ரஷ்யா, இதுவரை 1160 உக்ரைன் வீரர்கள் அங்கு சரண் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள்,உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வந்தாலும், ரஷ்யாவின் தாக்குதலை தடுத்து நிறுத்தும் அளவிற்கு ஆயுதங்கள் அதிகமாகவும், விரைவாகவும் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்நிலையில் போர் தொடங்கியதில் இருந்து 324 மருத்துவமனைகளை ரஷ்யா தாக்கியதாகவும் மற்றும் அதில் 24 மருத்துவமனைகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
இதை தொடர்ந்து உக்ரைன் அதிபர் கூறியுள்ளதாவது, கடந்த 2014ஆம் ஆண்டு டான்பாஸ் பிரச்சனை தொடங்கியது முதல் தற்போது வரை உக்ரைனில் சுமார் 15,000 பேரை ரஷ்ய படைகள் படுகொலை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் டான்பாசில் ஒரு உக்ரைனியர் கூட உயிருடன் இருக்கக் கூடாது என திட்டமிட்டு ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.