அம்மன் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழத்தை ஒருவர் 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பச்சாபாளையம் பகுதியில் மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 25-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் இந்த கோவிலில் பொங்கல் திருவிழா தொடங்கியது. அதன்பின் கடந்த 3-ஆம் தேதி தீர்த்த குடம், பால் குடம், ஆறுமுகக் காவடி, வேல் மற்றும் அக்னி கும்பம் எடுத்து வந்து பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளனர். கடந்த 4-ஆம் தேதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்துள்ளது.
இந்நிலையில் அம்மன் மடியில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஒரு எலுமிச்சை பழம் ஏலம் விடப்பட்டுள்ளது. அப்போது அதே பகுதியில் வசிக்கும் கோகுல் ஆனந்த குமார் என்பவர் அந்த எலுமிச்சை பழத்தை 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். அம்மன் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழத்தை வீட்டில் வைத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.