திரிபுரா மாநில பாஜக முதல் மந்திரி ஒரு குட்டி ஹிட்லர் என்று கம்யூனிஸ்ட் கட்சி மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.
திரிபுரா மாநிலத்தில் பிப்லப் குமார் தேப் என்பவர் பாஜக முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். அவரை குட்டி ஹிட்லர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது விமர்சனம் செய்து இருக்கிறது. இதுபற்றி அக்காட்சி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ” தலாய் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல் மந்திரி, வருகின்ற 2023-ம் ஆண்டுக்குள் திரிபுராவில் இருந்து கம்யூனிச தத்துவங்கள் அனைத்தையும் வேரோடு அகற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
திரிபுராவில் பாஜக கூட்டணி அரசு, ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டது. மிக முக்கியமான பதவியில் இருந்து கொண்டிருக்கும் அவர் பேசியது தவறு. கம்யூனிச தத்துவத்தை வேரோடு அகற்ற நினைக்கும் அவர், ஒரு குட்டி ஹிட்லர். அவரை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. அவரது ஆட்சியில் பல்வேறு இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. மேலும் பல தொண்டர்கள் உயிரிழந்துள்ளனர். சிலர் மீது போலீசார் பொய் வழக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.