டெல்லியில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்ட தொடரின் ஆறாம் நாளான நேற்று குடியரசு நாளில் நடந்த வன்முறை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்து பேசிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதற்கு அரசு தயார் என்று கூறியதால் அந்த சட்டதில் பிரச்சனை உள்ளது என்று நினைக்க கூடாது என்று தெரிவித்தார்.
குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் உள்ள மக்களை தவறாக வழி நடத்தப்பட்டு தூண்டி விடப்படுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார். புதிய சட்டங்களில் ஒரு குறையை கூட எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களால் கூற முடியவில்லை என்றும் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை எனவும் வேளாண் அமைச்சர் தெரிவித்தார். இதனிடையே மாநிலங்களவை திங்கள்கிழமை காலை 9 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் நாராயணன் சிங் அறிவித்தார்.