கோவிட் 19 தொற்றுக்கான லேசான அறிகுறி உள்ளவர்கள் சி.டி. ஸ்கேன் எடுப்பதால் எந்த பயனுமில்லை என்றும் அடிக்கடி சி.டி.ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது என டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கோவிட் 19 நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் லேசான அறிகுறி இருந்தாலும் உடனடியாக சி.டி. ஸ்கேன் எடுக்கும் பழக்கம் பரவலாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். லேசான அறிகுறிகளுக்கு சி.டி. ஸ்கேன் எடுப்பது ஆபத்தானது. பலர் லேசான அறிகுறிகளுடன் கோவிட் 19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் சி.டி.ஸ்கேன் எடுப்பது முக்கியம் என தவறாக நினைக்கிறார்கள்.
லேசான அறிகுறிகளுக்காக ஸ்கேன் செய்வதில் எந்த பலனும் இல்லை. லேசான தொற்று இருப்பது தெரிய வரும்போது வீட்டிலேயே தனிமையில் இருப்பதே நல்லது என்று கூறினார். ஒரு சி.டி. ஸ்கேன் 300 முதல் 400 மார்பு எக்ஸ்ரேக்களுக்கு சமம் என்றும் அடிக்கடி சிடி ஸ்கேன் எடுத்தால் உங்கள் மீதான கதிர்வீச்சின் தாக்கம் அதிகரிக்கும் . இதனால் பிற்காலத்தில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தேவையின்றி சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டாம் என்று ரந்தீப் குலேரியா கூறினார்.