புதுச்சேரி அடுத்த திருபுவனை அருகே உள்ள சன்னியாசி குப்பத்தை சேர்ந்த நாகராஜன்- மயில் தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் மயில் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் நாகராஜ் அம்பிகா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நாகராஜிற்கு நான்கு மகள்கள் அபினேஷ் என்ற மகன் இருக்கின்றார். இதில் மூத்த மகள் அங்காளம்மாளுக்கு திருமணம் ஆகியுள்ளது. இரண்டாவது மகள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றார். மேலும் கீர்த்தனா(18) என்ற மகள் கலிதீர்த்தால் குப்பத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார்.
இந்த நிலையில் நாகராஜன் முதல் மனைவி மயிலின் தம்பி முகேஷ்(22) என்பவர் கீர்த்தனாவை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அறிந்த கீர்த்தனா மறுப்பு தெரிவித்துள்ளார். அதன் பின்னும் முகேஷ் அடிக்கடி கீர்த்தனாவை தொல்லை செய்து வந்திருக்கின்றார். இந்த சூழலில் நேற்று மாலை 5 மணிக்கு தனியார் பேருந்து ஒன்றிலிருந்து சன்னியாகுப்பம் கடைவீதியில் இறங்கி வீட்டிற்கு சென்றுள்ளார் கீர்த்தனா. அப்போது அவரை மறித்த முகேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கீர்த்தனாவின் கழுத்து மற்றும் கை, கால் பகுதிகளில் சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் நிலைதடுமாறிய கீர்த்தனா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கீர்த்தனாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவலறிந்து வந்த திருபுவனை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கீர்த்தனா உடல் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. ஒருதலை காதல் விவகாரத்தில் பெண்ணின் தாய்மாமன் இளம் பெண்ணை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. முகேஷ் மீது ஏற்கனவே கோயில் பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையில் வெடிகுண்டு வீசிய வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.