Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரு நண்பரை காப்பாற்ற முயன்று உயிரை விட்ட 4 நண்பர்கள்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

திண்டுக்கல் அருகே அணையில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல்நகர் பாரதிபுரம் என்ற பகுதியில் கண்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவர் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை ஒன்றை வைத்துள்ளார். அவருக்கு 19 வயதில் கார்த்திக் பிரபாகரன் என்ற மகன் இருக்கிறான். அதே பகுதியை சேர்ந்தவர்கள் லோகநாதன், நாகராஜன், செல்வ பிரபாகர் மூன்று பேருக்கும் 19 வயது ஆன நிலையில் கல்லூரியில் படித்து வருகிறார்கள். அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் பரத், சுதர்சன் (19), சுரேஷ்குமார் (19), சரவணன் (19) இவர்கள் 8 பேரும் நெருங்கிய நண்பர்கள்.

இதனையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால், திண்டுக்கல் அருகே உள்ள ஆத்தூர் காமராஜர் அணைக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது செல்லும் வழியில் ஓட்டலில் சாப்பாடு வாங்கிக்கொண்டு, அணைப் பகுதிக்கு சென்று ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது கார்த்திக் பிரபாகரன் மட்டும் சாப்பிட்டு முடித்தவுடன் அணையில் இறங்கி குளித்துள்ளார். ஆனால் அணையின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். உடனே அவரின் அலறல் சத்தம் கேட்டு, லோகநாதன், செல்வ பிரபாகர், நாகராஜ் மற்றும் பரத் ஆகிய 4 பேரும் அணையில் குதித்தனர்.

ஆனால் அவர்களும் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கினர். தங்களின் கண்முன்னே நண்பர்கள் 5 பேரும் தண்ணீரில் மூழ்கி அதை கண்ட மற்ற நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் ஐந்து பேரின் உடலையும் மீட்டனர். அதன் பிறகு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்ணீரில் மூழ்கிய ஒரு நண்பரை காப்பாற்ற 4 பேரும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |