கொரோனா பரிசோதனை முடிவுகளைக் கண்டறிய புதிய தொழில்நுட்பக் கருவி ஒன்றை கராக்பூர் ஐஐடி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 1, 84,494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்க்கு ஒரே வழி பரிசோதனையை அதிகப்படுத்துவது மட்டுமே. இதனால் நேற்று மட்டும் இந்தியாவில் 4.2 லட்சம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா பரிசோதனை முடிவுகளை இன்னும் விரைவாகத் தெரிந்து கொள்ள கராக்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மூலம் புதிய தொழில்நுட்பக் கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் மூலம் ஒரு மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகளைத் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
இதுகுறித்து ஐஐடியின் பேராசிரியர்கள் சுமன் சக்ரபோர்தி, அரிந்தாம் மொண்டல் பேசுகையில், ”முழுமையான கொரோனா பரிசோதனையையும் மிகச் சிறிய சாதனத்தில் நடத்தமுடியும். இதன் முடிவுகளைத் தனிப்பட்ட செயலியின் மூலம் ஒரு மணி நேரத்தில் தெரிந்துகொள்ள முடியும். அதற்கு வெறும் 400 ரூபாய் மட்டுமே செலவாகும். இந்தப் பரிசோதனைகள் அனைத்தையும் சிறப்பு ஆய்வகங்கள் இல்லாமல் சிறிய தொழிற்நுட்பத்தில் செய்ய முடியும். அந்தத் தொழில்நுட்பத்தினை மீண்டும் பயன்படுத்தி அதிகப்படியான பரிசோதனைகளைச் செய்ய முடியும். ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளின் தரத்தினை இந்தப் புதிய தொழில்நுட்பத்தால் எளிதாக ஈடுகட்ட முடியும்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.