Categories
உலக செய்திகள்

ஒரு மாணவருக்கு தொற்று ஏற்பட்டாலும் வழக்கு தொடர்வோம் – எச்சரித்த அமைச்சர் …!!!

முதல்வரின் எதிர்ப்பை மீறி தேர்வு நடத்தி ஒரு மாணவருக்கு தொற்று ஏற்பட்டாலும் வழக்கு தொடர்வோம் என உயர் கல்வி துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் பல்கலைக் கழக தேர்வுகளை ரத்து செய்து மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே உத்தரவிட்டிருந்தார். ஆனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்த போவதாக  அறிவித்துள்ளது. “மகாராஷ்டிராவில் உள்ள பல்கலைக் கழகங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவல் அதிகளவு இருப்பதால், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் குழு உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவை முதல்வர் வெளியிட்டுள்ளார். ஆனால், தேர்வை நடத்த யுஜிசி புதிய விதிமுறைகளை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. பாஜ ஆளும் மாநிலங்களில் மட்டுமே இதற்கு வரவேற்பு உள்ளது. மற்றபடி மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள் தங்களது எதிர்ப்பை  தெரிவித்துள்ளனர்.

எனவே, ஈகோ பிரச்னையில் மத்திய உள்துறை அமைச்சகம் எந்த ஒரு மோசமான முடிவையும் எடுக்கக்கூடாது. கொரோனா தொற்று பரவல் அதிகளவு இருப்பதால், இந்த தேர்வை நடத்தக்கூடாது என மாநில அரசு உறுதியாக இருக்கிறது. இறுதியாண்டு முடிக்கும் மாணவர்களுக்கு பட்டபடிப்பு  சான்றிதழ்கள்  வழங்க நடவடிக்கை எடுக்குமாறு  துணை வேந்தர்கள் ஏற்கனவே கடிதம் கொடுத்துள்ளனர். அப்படி இருக்கும் போது , தற்போது யுஜிசியின் நடவடிக்கை சரியானதாக தெரியவில்லை. ஒருவேளை தேர்வை  நடத்தப்பட்டால் , கொரோனா நோய் தொற்றுக்கு மாணவர்கள் ஆளாவார்கள்.

9 லட்சம் மாணவர்களை எப்படி, எங்கே தங்க வைத்து, பரிசோதித்து தேர்வுக்கு அனுப்பி வைப்பீர்கள் ? அவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை  பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பு ஏற்குமா?. மாநில அரசின் உத்தரவை மீறி தேர்வு நடத்தப்பட்டால், ஒரு மாணவருக்காவது தொற்று ஏற்பட்டால், துணை வேந்தர்கள் மீது எப்ஐஆர் பதிப்பட்டு வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் வாழ்க்கையில் யாரும் விளையாடக் கூடாது. இந்த பிரச்சனையை அந்தந்த மாநில அரசின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |