மணல் எந்த அளவின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசு பதில் கூறியுள்ளது.
திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசு தற்போது நேரடியாக மணலை விற்பனை செய்கிறது. இது குறித்து அரசாணையின் அடிப்படையில் யூனிட் அளவில் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் இது தர நிர்ணயம் செய்யப்பட்ட அளவீடு கிடையாது. இவ்வாறு முறையீடு செய்யாமல் மணல் விற்பனை செய்யப்படுவதால், அரசுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்படுகின்றது. இதனால் முறைகேடுகளும் நிகழ்கின்றது .
ஆகவே இதனை முறைப்படுத்த கோரி அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மணல் விற்பனை செய்ய தரநிர்ணய அளவீட்டை உருவாக்கி அதன் அடிப்படையில் மணல் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் மணல் எந்த அளவின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது என கேள்வி எழுப்பி இதுகுறித்து அரசு தரப்பில் பதில் தெரிவிக்க உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று அரசு தரப்பில் இருந்து ஒரு யூனிட் என்பது 2.83 கனமீட்டர் என அளவிட்டு விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.